வியாழன், 28 மே, 2015

என்னோடு சில வார்த்தைகள்.....

இப் பூகோலத்தில் பலர் இயந்திரத்தனமாய் எங்கெங்கோ.... ஏதெதெற்கோ ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையின் எதார்த்தத்தை அசை போடுகையில் கிடைக்கும் விடையிலும் ஏதோ சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. நம்மை சுற்றி இருக்கும் எல்லோரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். எப்போதும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பரபரப்பு இருப்பதும் அப்படியான பரபரப்பிற்காய் ஏதேதோ இலக்குகளுடன் காத்துக் கிடப்பதும் புரிகிறது. என்னைச் சுற்றியும் பலர் ஏதோ பேசிக்கொண்டும், நடுநிலைவாதப் போதையில் அடுத்தவனை விமர்சித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

அடுத்த வீட்டு அபூபக்கர் தாத்தாவுக்கு வயது 60ஜ தாண்டிவிட்டது. அப்படி அதிகம் வயதானதால்தான், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று வருவோர் போவோரிடம் எல்லாம் அலட்டிக் கொண்டு..... "என்ட அனுபவம் உன் வயசு" என்று இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்...

தேசிய அரசியலையும், உலக அரசியலையும் ஒரு கை பார்க்கும் தேநீர் கடையடியில் கூடும் அங்கிள்களும், பென்ஷனான அப்பாக்களும், என் அக்கம் பக்கத்து விடலைகளும், ஏன் சமூகத்தள மேதாவிகளும் தங்களின் கருத்துக்களை எல்லாம் உலக இறுதி உண்மைகளாக எப்போதும் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த செய்திகள், அனுபவங்கள் அவர்களுக்கு கொடுத்த புரிதல்கள், மற்றும் அவரவர்க்கு தோன்றும் கற்பனைகள் எல்லாவற்றையும் திரட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் புலமையைப் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் எடுத்து இயம்பி தன்னை மிகப்பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்ள இடைவிடாது முயல்கிறான்....

இங்கே எல்லோருக்கும் ஏதோ ஒரு கருத்து சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படியாய் சொல்லும் கருத்தில் பெரும்பாலும் மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கும் மிகுந்திருக்கிறது. அப்படி குறை சொல்லும் போது மறைமுகமாய் தன்னை நல்லவன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு சுய தம்பட்டம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது...

சிலர், அவ்வப்போது பிறரை பாராட்டவும் செய்கிறார்கள். அப்படி பாராட்டும் போது கூட வெகு சிலரே ஆத்மார்த்தமாக வியந்து, கைகொட்டி சிரித்து ஆச்சர்யமாய் ஒரு குழந்தையைப் போல வாய் பிளந்து பாரட்டுகிறார்கள். மிகையானவர்கள் பாராட்டும் இடம் என்பது கூட நான் பாராட்டுகிறேன், நான் எவ்வளவு பெரிய மனிதர் என்று பார்த்துக் கொள்ளுங்கள் உலகத்தவரே! என்று அறிவிக்கும் பொருட்டே செய்கின்றனர்.

பகிர்தல் என்பதன் அர்த்தம் இங்கே தொலைந்து போய்விட்டது. ஒரு மனிதனுக்குள் தாக்கம் கொடுத்த விடயங்களை சக மனிதர்களிடம் பகிரலாம், நகைச்சுவையாய் அடுத்த மனிதரை சிரிக்க வைக்கும் கருத்துக்களைப் பகிரலாம், அல்லது புதிய தகவல்களை தெரிவிக்கும் வகையில் பகிரலாம்.

இப்படியாய் பகிர்தல் என்பது அடுத்தவனுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படை தர்மத்தை மறந்து விட்டு, ஒலைப்பெட்டிக்குள் புகுந்த ஓணான் போல எல்லோரும் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கற்றுக் கொள்ள நம்மைச் சுற்றி குறைவான மனிதர்களே இருக்கிறார்கள், ஆனால் கற்றுக் கொடுக்க நிறைய பேர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை விட அவர்களுக்குச் சேவை செய்கிறேன் என்று கிளம்பியிருக்கும் மனிதர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். பகிர்தலில் தங்களின் அனுபவத்தையும் அறிவையும் பகிர இங்குள்ள பலரும் தயாரில்லை.

நீ இப்படி இரு...அல்லது அப்படி இரு...., இது தவறு, இது சரி, என்று புள்ளி விபரங்களை வளர்ந்திருக்கும் இன்றைய நவீன ஊடகங்கள் மூலம் சிலவற்றை தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு புலமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரனையும் எதிர்வீட்டுக்காரனையும் யாரென்று தெரிந்து கொள்ளாமல், உறவுகளை சரியாக பயன்படுத்துவது எப்படி என்ற புரிதல் இல்லாமல், சகோதரத்துவத்தையும் அன்பையும் பற்றி எழுதியும் பேசியும் என்ன லாபம் இருக்கிறது..?

இதனால் தான் நான் பல நேரங்களில் மெளனித்து விடுகிறேன். காரணம் எனக்கு அர்த்தமற்றப் பேச்சுக்களிலும் நேரத்தை விழுங்கும் வெற்று அரட்டைகளிலும் அக்கறை கிடையாது.

வாழ்க்கையில் எனக்கொரு பிடிப்பும் கிடையாதுதான், ஆமாம் எல்லாவற்றையும் தலைக்கு எடுத்துக் கொண்டு கனமாய் நகரவிரும்பவில்லை நான்.  "வாழ்க்கையில் தன்மீது அக்கறை காட்டும் ஒரு உறவு இருந்தால் இன்னும் 100 வருஷமும் வாழலாம்" என்று சொல்லும் ஒரு பாட்டியின் குரலையும் அண்மைய தமிழ் திரைப்படம் ஒன்றில் கேட்க கிடைத்தது. உண்மைதான் என்றாலும் ஒரு மெல்லிய மனிதனாய், எளிதான வாழ்க்கையை வாழ்வதில் எனக்கு யாதொரு சிக்கல்களும் இல்லை.

இந்தக்கணத்தில் கிடைக்கும் பிணைப்பு அடுத்த கணத்தில் எனக்கு இரணத்தை கொடுக்கிறது. இந்தக் கணத்தில் நான் பிணைப்பிட்டுக் கொள்ளாமலே இருந்தால் எனக்கு வலிகளோ இந்த இரணங்களோ வரப்போவதில்லை...! புரிதலின்மையால் கடந்த கால பிணைப்புகள் கொடுத்திருக்கும் இரணங்கள் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கின்றன. அதே நேரத்தில் கடந்த காலத்தில் செய்த சில இலகுவான காரியங்கள் என்னை காற்றில் சிறகடித்துப் பறக்கவும் செய்கின்றன.

மெல்லியதொரு  புன்முறுவலை எப்போதும் என் முகத்துடன் அப்பி கொள்ள முயற்சிக்கிறேன். அது மனிதர்களை எளிமையாக கர்வமின்றி கையாள ஆரம்பிக்கும் போதுதான் சாத்தியமாகும். இயல்பாய் சிரித்து ... அன்பை பகிரும் போதெல்லாம், என் சுற்றமும் நட்பும் அதையே எனக்குச் திரும்பச் செய்தது...செய்கின்றது...

உலகம் எப்போதும் போற்றியும் தூற்றியும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள்... வாழ்க்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறது. உங்கள் கருத்துக்களால் என்னை யாரும் நிரப்ப முயலாதீர்கள்....அதே நேரத்தில் என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டுமா என்றும் என்னிடம் கேட்காதீர்கள்.

உலகப்பிரச்சினைகளை உரசிப்பார்த்து அதை உங்களின் பொழுது போக்காய் ஆக்கிக் கொள்ளுங்கள்.

நான் வழியில் கிடக்கும் முட்களையும், கற்களையும் பொறுக்கி எடுத்துக் கொண்டு கடந்த கால குப்பைகளை எறிந்து கொண்டு என் வழியில் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

தலை சிறந்த மனிதராய், உலகம் போற்றும் சமூக சேவகனாய், புகழ் பெற்ற தலைவராய், மிகப்பெரிய ஆன்மீக தலைவராய், மேதாவியாய், 

நீங்கள் வாழ்ந்து விட்டுப் போங்கள்...

0 கருத்தாடல்கள்:

கருத்துரையிடுக

உங்கள் பார்வை